ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகம்: தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துக-ராமதாஸ்

சென்னை, பிப்ரவரி-19

ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகம் சிறப்பான திட்டம் எனவும், அதனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தை உள்ளிட்ட விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் வழங்கக்கூடிய ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களை 5 மாவட்டங்களில் அமைக்க தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. பாமகவின் யோசனைகளில் ஒன்றான இத்திட்டம் செயல் வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வேளாண் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின்படி முதல்கட்டமாக திருவண்ணாமலை, தருமபுரி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்கள் அமைக்கப்படும்.

இந்த வளாகங்களில் விவசாயிகள் தங்களின் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான கடைகள், வேளாண் விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டும் மையங்கள், விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வசதிகள், விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் நிலையங்கள், மளிகைப் பொருள் விற்பனை நிலையங்கள் ஆகியவை ஏற்படுத்தப்படும். இவை தவிர விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்குத் தேவையான தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளும் அமைத்துத் தரப்பட உள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய சந்தைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாமக தாக்கல் செய்து வரும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கைகளிலும், 2016-ம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையிலும் இத்திட்டம் இடம் பெற்றிருந்தது. மேலும், இந்தச் சந்தைகளை நாடு முழுவதும் உள்ள மற்ற சந்தைகளுடன் மின்வணிக நுழைவாயில் மூலமாக இணைக்க வேண்டும் என்றும் பாமக கூறியிருந்தது. அந்த வசதியையும் இந்த வளாகங்களில் அரசு ஏற்படுத்தவிருப்பது பாமகவுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

பாமகவின் யோசனையை ஒட்டி அமைக்கப்படும் இந்தச் சந்தைகளின் சிறப்பம்சமே இவற்றில் இடைத்தரகர்கள் இருக்க மாட்டார்கள் என்பதுதான். வழக்கமான சந்தைகளில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்யச் செல்லும்போது, அங்குள்ள வணிகர்களும், இடைத்தரகர்களும் நிர்ணயிக்கும் விலைக்கு பொருட்களை விற்றுவிட்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்த முறையில் சந்தையில் விற்பனை செய்யப்படும் விலையில் பாதித் தொகை கூட விவசாயிகளுக்குக் கிடைக்காது. ஆனால், புதிதாக அமைக்கப்படவிருக்கும் ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களில் விவசாயிகளே தங்களின் விளைபொருட்களை நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடியும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதுடன், நுகர்வோருக்கும் குறைந்த விலையில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும். இது இரு தரப்பினருக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

ஒரே நேரத்தில் ஒரே வகையான காய்கறிகள் சந்தையில் குவியும்போது விலை சரியக்கூடும். அதைத் தடுக்கவும் இந்த வளாகங்களில் வசதிகள் உள்ளன. விவசாயிகள் விரும்பினால் வளாகங்களில் உள்ள மதிப்பு கூட்டும் மையங்களில் தங்களின் பொருட்களை மதிப்பு கூட்டி, புதிய பொருளாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும்.

அவ்வாறு செய்ய விரும்பாத விவசாயிகளுக்காக வளாகங்களில் 25 முதல் 50 டன்கள் வரையிலான காய்கறிகளைப் பாதுகாத்து வைக்கக்கூடிய குளிரூட்டப்பட்ட கிடங்குகள் அமைக்கப்படும். அங்கு தங்களின் பொருட்களைச் சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்து கொள்ளலாம். இதனால் வேளாண் விளைபொருட்கள் வீணாவது தடுக்கப்படும்.

இந்த சந்தைகளை சிறு மற்றும் குறு விவசாயிகள் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக மேலும் சில யோசனைகளை நடப்பாண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் பாமக முன்வைத்துள்ளது. இந்த சந்தைகளுக்கு பொருட்களைக் கொண்டு செல்ல வசதியாக இரவு 8.00 மணிக்குப் பிறகு வேளாண் விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

வேளாண் விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் சிறிய சரக்குந்துகள், இழுவை ஊர்திகள் ஆகியவற்றுக்கு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் பாமக முன்வைத்த யோசனைகளாகும். அவற்றையும் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்கள் விவசாயிகளின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய சந்தை வளாகங்களை தமிழகம் முழுவதும் அரசு விரிவுபடுத்த வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *