தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி: பலத்த போலிஸ் பாதுகாப்பு

சென்னை, பிப்ரவரி-19

உயர்நீதிமன்ற தடையை தாண்டி இஸ்லாமிய அமைப்புகளின் பேரணி சென்னையில் நடைபெற்று வருகிறது.

சிஏஏவுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி பிப்.19 சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் போராட்டத்துக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இஸ்லாமிய இயக்கத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தலைமை செயலகம் முற்றுகை போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் போராட்டம் அமைதியான முறையில் கட்டாயம் நடக்கும் என தெரிவித்தனர்.

அதன்படி, இன்று (பிப்.19) காலை 10.30 மணியளவில், சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இருந்து இஸ்லாமிய அமைப்புகளின் பேரணி தொடங்கியது. இதில், 23 அமைப்புகளை சேர்ந்த பல்வேறு இஸ்லாமியர்கள், முஸ்லிம் லீக், திமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பேரணியில் தேசிய கொடி, ‘நோ சிஏஏ’, ‘நோ என்பிஆர்’, ‘நோ என்ஆர்சி’ ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி சென்றனர்.

இந்த பேரணியால், வாலாஜா சாலையின் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஆயிரக்கணக்கிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தடையை மீறி பேரணி நடைபெறுவதால், ட்ரோன் கேமராக்கள் மூலம் பேரணி கண்காணிக்கப்பட்டு வருகிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே இரும்பு தடுப்புகள் அமைத்து, பேரணியை தடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *