இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம்: தற்போது கையெழுத்து இல்லை-ட்ரம்ப்
வாஷிங்டன், பிப்ரவரி-19
இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும், ஆனால் அது தற்போதைய இந்திய பயணத்தில் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக வரும் 24 மற்றும் 25-ம் தேதி வருகிறார். அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா கிரிக்கெட் அரங்கை அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி ஆகிய இருவரும் திறந்து வைக்கின்றனர். அதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் பங்கேற்கிறார்.
ட்ரம்ப்பின் இந்திய பயணத்தில் இந்தியாவுடன் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய பயணத்தில் வர்த்தக ஒப்பந்தங்கள் ஏதும் இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
இந்திய பயணம் குறித்து ட்ரம்ப் கூறும்போது, “இந்திய பிரதமர்
மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை வரவேற்க விமான நிலையம் முதல் ஸ்டேடியம்
வரை லட்சக்கணக்கான மக்கள் இருப்பார்கள்
என்று அவர் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக அது மிக அற்புதமாக இருக்க
போகிறது.
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம். ஆனால், அதனை நான் தற்போது செய்யப் போவதில்லை. அந்த ஒப்பந்தம் அதிபர் தேர்தலுக்கு முன்னர் இருக்கலாம். இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்யவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.