சிஏஏ-க்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே கூறியது அவரது தனிப்பட்ட கருத்து, எங்களுக்கு உடன்பாடில்லை-சரத் பவார்

மும்பை, பிப்ரவரி-18

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நிலையில் அது சிவசேனாவின் தனிப்பட்ட கருத்து என கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. இதேபோல் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி உத்தவ் தாக்கரே இன்று கூறியதாவது:

‘‘சிஏஏ, என்.ஆர்.சி.யும் வெவ்வேறானவை. இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். அதுபோலவே என்.பி.ஆர். வேறானது. சிஏஏ -வால் யாருக்கும் பாதிப்பு வராது. அதனை மகாராஷ்டிராவில் அதனை அமல்படுத்தினால் யாரும் கவலை கொள்ள வேண்டாம். அதேசமயம் என்.ஆர்.சி. அமல்படுத்தப்படாது’’ எனக் கூறினார்.

சிவசேனாவின் இந்த நிலைப்பட்டால் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியதாவது:

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குடியுரிமைச் சட்டம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. குடியுரிமைச் சட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு நடந்தபோது தேசியவாத காங்கிரஸ் எதிர்த்து வாக்களித்தது’’ எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *