சுபஸ்ரீ வழக்கில் காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை, செப்டம்பர்-25

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயகோபாலை கைது செய்யாதது ஏன் என கேள்வியெழுப்பியுள்ள நீதிபதிகள், இது தொடர்பாக நடக்கும் அனைத்து விசாரணைகளையும் சென்னை காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என திமுக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டது.  

சென்னை மாநகராட்சி சார்பிலும், காவல் துறை சார்பிலும் தனித்தனியாக அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. மாநகராட்சி அறிக்கையில், உதவிப் பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு மாநகராட்சி சார்பில் 5 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறை அறிக்கையில் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயகோபாலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஜெயக்கோபாலை எப்போது பிடிப்பீர்கள் என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், அவரை கைது செய்ய எடுத்த நடவடிக்கைகளை போக்குவரத்து பிரிவு காவல் ஆணையர் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், வழக்கு மொத்தத்தையும் காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *