உ.பி. பட்ஜெட்: அயோத்தி உள்கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு

லக்னோ, பிப்ரவரி-18

உத்தர பிரதேச மாநில பட்ஜெட் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் அயோத்தி நகரத்தின் வளர்ச்சிக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டது.

அந்த உத்தரவின்படி ஸ்ரீ ராமஜென்மபூமி திரத் ஷேத்ரா எனும் அறக்கட்டளை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு விரிவான திட்டங்களை மத்திய அமைச்சரவை உருவாக்கியுள்ளது. இதன்படி 67.77 ஏக்கர் நிலம் முழுவதும் அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும்.

உத்தர பிரதேச பட்ஜெட்டில் அயோத்தி நகரத்தின் வளர்ச்சிக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டுக்கான அம்மாநில பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதில் அயோத்தில் விமான நிலையம் அமைக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அயோத்தி நகரில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள துளசி சமாராக் பவனை சீரமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடியின் வராணாசி தொகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் பகுதியில் வளர்ச்சி மேம்பாட்டுக்கு 180 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேத விஞ்ஞான கேந்திராவுக்கு 18 கோடியும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்பவர்களுக்கு மானியமாக 8 கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *