CAA போராட்டம்: தடைவிதிக்க மறுப்பு, சட்டம் ஒழுங்கை காவல்துறை பார்த்துக்கொள்ளும்

சென்னை, பிப்ரவரி-18

சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உயர்நீதிமன்றம், சட்டம்- ஒழுங்கை கையாள்வது எப்படி என காவல்துறைக்கு தெரியும் என்று பதிலளித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

சட்டப்பேரவையில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (பிப்-19) அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன. இது மிகப்பெரிய முற்றுகை போராட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாளை நடக்க உள்ள சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார். மேலும், இதனை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள முறையீடு செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வழக்கு பட்டியலில் வரும்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும், பேரணியின்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதனை காவல்துறை கண்காணித்து கொள்ளும். சட்டம்-ஒழுங்கை எப்படி கையாள்வது என்று காவல்துறைக்கு நன்றாக தெரியும் என நீதிபதிகள் தெரிவித்து முறையீட்டை ஏற்க மறுத்துவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *