உதகையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 பசுமை வீடுகள்-அமைச்சர் S.P.வேலுமணி
சென்னை, பிப்ரவரி-18
உதகையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 பசுமை வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். தஞ்சாவூர் மாவட்ட பூதலூர் ஒன்றியம் வீரமரசன்பேட்டை ஊராட்சியில் பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: தொகுப்பு வீடு திட்டம் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. பழுதடைந்துள்ள 45,596 தொகுப்பு வீடுகளை பழுதுநீக்கம் செய்ய ரூ.260 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடுகள் பழுது நீக்கம் செய்து தரப்படும். இதுவரை 2400 வீடுகள் பழுதுநீக்கம் செய்யப்பட்டுள்ளது. தொகுப்பு வீடுகளை பழுதுநீக்க முதலமைச்சர் சிறப்பு நிதி ஒதுக்கி உள்ளார் என்றார்.
அதை தொடர்ந்து வால்பாறை தொகுதி உறுப்பினர் கஸ்தூரி வாசு கேள்வி எழுப்பினார். வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனைமலை, டாப்சிலிப் பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பழுதடைந்த வீடுகளை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்கையில், 25 ஆண்டுகளுக்கு மேல் பழுமையான வீடுகளை பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதியிலும் பழுதுநீக்கம் செய்யலாம் என்றார்.
அதை தொடர்ந்து ஊட்டி தொகுதி உறுப்பினர் கணேஷ் துணை கேள்வி எழுப்பி, ஆதிதிராவிடர் வசிக்கும் 100 குடியிருப்புகள் பழுதாகி உள்ளன. அவர்களுக்கு பசுமை வீடு கட்டி தர ஆவன செய்ய வேண்டும் என்றார்.
இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று 100 பசுமை வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்