வருமான வரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆஜர்!
சென்னை, பிப்ரவரி-18
சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் அட்லி இயக்கத்தில், நடிகா் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படம் மூலம் ரூ.300 கோடி லாபம் கிடைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் ஏஜிஎஸ். நிறுவனம், நடிகா் விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரித் துறையினா் திடீா் சோதனை செய்தனா்.
இதில் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77 கோடி கணக்கில் வராத பணமும், ரூ.300 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமானவரி துறை அறிவித்தது.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள் குறித்து நடிகர் விஜய் மற்றும் பைனான்சியரின் ஆடிட்டர்கள் மற்றும் ஏ.ஜி.எஸ். குழுமத்தின் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரிடம் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக பைனான்சியர் அன்புச்செழியன் ஆஜர் ஆகியுள்ளார். வருமான வரித் துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க அவர் வந்துள்ளார்.