டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? – அமைச்சர் தங்கமணி விளக்கம்
சென்னை, பிப்ரவரி-18
தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன என்பது குறித்து அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் இன்று விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் அதிகரித்து வருவது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று திமுக கேள்வி எழுப்பியது.
அதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதிமுக கூறியபடி, மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் உயர்வதற்கு காரணம், பொதுமக்கள் மது குடிப்பது அதிகரிப்பதே. அதற்கு அரசு என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்.
மக்கள் அதிகமாக மதுபானங்களை வாங்கி குடிப்பதே டாஸ்மாக் வருவாய் உயர்வுக்கு காரணம். மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி, அதிமுக ஆட்சி அமைந்ததுமே 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் பேரவையில் அமைச்சர் தங்கமணி பேசினார்.