ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்க காரணம் என்ன? ஓ.பி.எஸ். எப்போது மாடுபிடித்தார்- துரைமுருகன்

சென்னை, பிப்ரவரி-18

ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறீர்கள், அவர் எப்போது மாடு பிடித்தார் என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த 14-ம் தேதி 2020-2021 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதையடுத்து, நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய பேரவையில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசும்பொழுது, ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறீர்கள், அவர் எப்போது மாடு பிடித்தார் என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சட்டம் இயற்றிய காரணத்தினால், ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறோம் என்று கூறினார்.

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் நீங்கள் மாடுபிடிக்க வந்தால், அதற்கான ஏற்பாட்டை நான் செய்து தருகிறேன் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்.

மீண்டும் பேசிய துரைமுருகன், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று ஓ.பி.எஸ். மாடுபிடித்தால் நாங்கள் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அதை காண ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறினார். இந்த விவாதத்தின் போது பேரவை சிரிப்பலையில் மூழ்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *