டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு: திமுகவினருக்கு தொடர்பு உள்ளது-அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, பிப்ரவரி-18

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் கே.என்.நேரு உள்ளிட்ட திமுகவினர் விரைவில் சிக்குவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சிங்காரவேலரின் 161-வது பிறந்த நாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பாண்டியராஜன், சரோஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், “2006- 2011 காலகட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடந்திருக்கிறது. இதில் கே.என்.நேரு, அந்தியூர் செல்வராஜ், மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கு தொடர்பிருக்கிறது. அவர்களின் பரிந்துரை கடிதங்கள், முறைகேடு தொடர்பான சோதனையின்போது அப்போதைய டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து வீட்டில் சிக்கியிருக்கிறது.

இதுகுறித்து 2010-ல் கே.என்.நேருவின் அலுவலக முத்திரையோடு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. வீரபாண்டி ஆறுமுகம் மறைந்துவிட்டார். ஆனால் இவர்கள் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அடுத்த மாதம் 19-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது உண்மைகள் அனைத்தும் வெளிவரும். அப்போது பரிந்துரை கடிதம் கொடுத்தவர்கள் கண்டிப்பாக சிக்குவார்கள்.

என்பிஆர் கொண்டு வந்ததே திமுகதான். திமுகவும் காங்கிரஸும் கொண்டு வந்தன. அதை இப்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர். அதற்கு எதிராக போராட்டம் நடத்த ஜனநாயக நாட்டில் அவரவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் முதல்வர் சட்டப்பேரவையிலும் ஜமாத் பெரியவர்களையும் சந்தித்தபோது தெளிவுபடுத்தியுள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு எப்போதும் அரசு துணை நிற்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியின் அவதூறு கருத்து திமுகவின் பண்பைக் காட்டுகிறது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *