சட்டப் பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை.பிப்ரவரி.17

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறை நடத்திய தடியடியில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி, விஷமிகள் போராட்டத்தை தூண்டுவதாக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, திமுக தலைவர் ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வரும்நிலையில், சிஏஏ.,க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும், விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை நிராகரித்த பேரவைத் தலைவர் தனபால், தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை என்றும்,சட்டப்பேரவையின் விதிப்படி அதற்கு அனுமதி இல்லை என்றும் கூறினார். எனினும் வண்ணாரப்பேட்டையில்  நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடி குறித்து மட்டும் சட்டசபையில் பேச அனுமதி அளிப்பதாக கூறினார்.

 இதனையடுத்து வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அளித்த விளக்கமளித்து பேசினார்.

சிஏஏ.,க்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியில்லாமல் போராட்டம் நடந்துள்ளது. இதனால், போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றபோது, ஒத்துழைக்க மறுத்து காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் காவலர்கள் மீது செருப்பு, கற்கள், பாட்டில் வீசப்பட்டன. இதனாலேயே தடியடி நடத்தப்பட்டது. நோயால் இறந்த முதியவரின் படத்தை பகிர்ந்து, தடியடியால் இறந்ததாக வதந்தி பரப்பி, மாநிலம் முழுவதும் சில சக்திகளும், சில விஷமிகளும் போராட்டத்தை தூண்டி விட்டுள்ளனர். தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வரும் எந்த திட்டத்திற்கும் அனுமதி இல்லை. முஸ்லிம்களின் அரணாக அதிமுக செயல்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி விளக்கமளித்தார்.

இதில் திருப்தி அடையாத திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர், சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு தயாராக இல்லாததை கண்டித்தும், முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்தும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சிஏஏ.,க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்து கேட்டபோதெல்லாம் ஆய்வில் இருப்பதாக முதலமைச்சர் கூறினர். ஆனால், தற்போது விவாதிக்காமலேயே கோரிக்கையை நிராகரித்துள்ளனர். ஜல்லிக்கட்டு பிரச்னையில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது விவாதித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது விவாதிக்கூடாது என்கின்றனர் என   ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *