அதீத துணிவு’ விருது பெற்ற கடையம் தம்பதி வீட்டில் நடந்தது என்ன ?

நெல்லை ஆக 24

நெல்லை மாவட்டம் கடையத்தில் வயதான தம்பதியினரிடம் கொள்ளையடித்த முகமூடி நபர்கள் சிக்காததால் காவல்துறையினர் திணறிவருவதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் கடையம், கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது70). இவரது மனைவி செந்தாமரை (வயது 65). இவர்களது 2 மகன்கள், ஒரு மகள் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசிக்கின்றனர். கடந்த 11-ம் தேதி இரவு அரிவாள்களுடன் வந்த முகமூடி கொள்ளையர்கள் சண்முகவேல், செந்தாமரை தம்பதியை மிரட்டி கொள்ளையடிக்க முயன்றனர்.அவர்களுடன் துணிச்சலுடன் போராடிய தம்பதியர், கொள்ளையர்களை விரட்டியடித்தனர். அப்போது, செந்தாமரையில் கையில் வெட்டிய கொள்ளையர், அவர் அணிந்திருந்த 35 கிராம் நகையுடன் தப்பிச் சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கடையம் காவல்துறையினர், 4 தனிப்படைகள் அமைத்து, சண்முகவேல் வீட்டில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. சென்னையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவ்ல் கடையம் தம்பதிக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் பழனிசாமி, ‘அதீத துணிவு’ விருது வழங்கி பாராட்டினார்.

கொள்ளை சம்பவம் தொடர்பாக கடையம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். கொள்ளைக்கு எந்த சம்பந்தமும் இல்லாதவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று துன்புறுத்துவதாகக் கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையத்தில் ஏராளமான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் குற்றவாளிகள் சிக்காததால் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

அரிவாள்களுடன் வந்த கொள்ளையர்கள் தம்பதியை வெட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படவில்லை. தம்பதி தாக்கியபோதும், கொள்ளையர்கள் தற்காப்பு நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளனர். இது, காவல்துறையினருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.சொத்து பிரச்சினை அல்லது பணப் பிரச்சினையில் தம்பதியை மிரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்களை ஏவி விட்டு நடத்தப்பட்ட நாடகமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதனால், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.வெகுவிரைவில் உண்மையான குற்றவாளியை பிடித்துவிடுவோம் என்று காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *