நாங்குநேரி-அதிமுக வேட்பாளர் யார்?
செப்டம்பர்-25
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் அக்டோபர் மாதம் 21-ம் தேதி நடைபெறுகிறது. அந்தந்த அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். அதிமுக சார்பில் நாங்குநேரி தொகுதியில் நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் நாராயணன் யார்? அவர் கட்சியில் என்னென்ன பதவியில் வகித்தவர் என்பது குறித்து பார்க்கலாம்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த ரெட்டியார்பட்டியை சேர்ந்த வெட்டும் பெருமாள் நாடாரின் புதல்வன் தான் வெ.நாராயணன். இவருக்கு வயது 51. கல்வியில் 10-ம் தேர்ச்சி பெற்ற நாராயணன் இந்து சமயத்தின் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.
1986-ல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்ட நாராயணன், கட்சிக்காக பல்வேறு வகையில் உழைத்துள்ளார்.
அதன்பிறகாக, 1991 முதல் 1996 வரை கட்சியின் கிளை செயலாளர் பதவி நாராயணனுக்கு கொடுக்கப்பட்டது. அதிலும் சிறப்பாக பணியாற்றிய நாராயணன், 1996 லிருந்து ரெட்டியார்பட்டி பஞ்சாயத்து தலைவராக பணிபுரிந்துள்ளார்.
இதனையடுத்து, 2004 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் பணிக்குழு உறுப்பினராகவும், 2009-ல் நாங்குநேரி சட்டமன்ற தேர்தல் பணிக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
2009-ல் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளராக நாராயணனை நியமித்துள்ளார். அதன்பிறகு அரிய வாய்ப்பாக நெல்லை புறநகர் தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் பதவி நாராயணனுக்கு கிடைத்தது.
2011-ம் ஆண்டு ஜெயலலிதா பேரவையின் மாவட்ட புறநகர் துணை செயலாளராக பணியாற்றிய நாராயணன், 2013 முதல் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் இருந்துள்ளார். தொடர்ந்து அதிமுகவில் ஒன்றியம், வட்டம், மாவட்டம் என பல்வேறு பொறுப்புகளை வகித்த நாராயணனுக்கு தற்போது நாங்குநேரி தொகுதிக்கான எம்.எல்.ஏ. சீட் கிடைத்துள்ளது.