தமிழக பாஜக தலைவராகிறார் ஜி.கே.வாசன்?
சென்னை, பிப்ரவரி-15
கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பாஜக தலைவர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவராக தமிழிசை சவுந்திரராஜன், 2014 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். அவரது பதவிக்காலம் 2019 டிசம்பர் மாதத்தில் முடிவடையும் முன்பே, செப்டம்பர் மாதத்தில் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்தி முடித்த பின்னர் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று, பா.ஜ.க. மேலிடம் கூறியது.
இந்த நிலையில் கேரளா, மத்திய பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளபர். ஆகையால், தமிழக பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், கருப்பு முருகானந்தம், முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கே.டி. ராகவன், உள்ளிட்டோர் பெயர் பரிந்துரையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் ஜி.கே.வாசன் தனது தமிழ் மாநில காங்கிரஸை பாஜகவுடன் இணைத்துவிட்டு, மாநில தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.