அமெரிக்காவில் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு தடை

வாஷிங்டன், பிப்ரவரி-15

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா, விடுதலை புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரில், கொடுமையான உரிமை மீறல்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதால், அவரை அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இறுதிகட்ட போரின்போது, ஈழத்தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல விடாமல் இலங்கை ராணுவத்தின் 58-வது பிரிவு தலைமை சவேந்திர சில்வா தடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

தற்போது, சவேந்திர சில்வா, இலங்கை ராணுவத்தின் தளபதியாக உள்ளார். அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள சவேந்திர சில்வா திட்டமிட்டிருந்தார்.

ஆனால், விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட போரின் போது, மனித உரிமை மீறல்களில் சவேந்திர சில்வா ஈடுபட்டது ஐ.நா.விலும், பல்வேறு அமைப்புகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம், எங்கள் நாட்டு ராணுவ தளபதி சவேந்திர சில்வா குறித்து வெளியான தகவல்களை முழுமையாக பரிசீலிக்காமல் ஆய்வு செய்யாமல் தடை விதித்ததை கடுமையாக கண்டிக்கிறோம்.

நம்பகத்தன்மையான தகவல்களை பெற்று, ஆய்வு செய்து, தங்கள் முடிவை அமெரிக்க அரசு மாற்றி கொள்ள வேண்டும் என இலங்கை அரசில் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *