பெற்றோரின் பிறப்பிடம் எனக்கு தெரியாது, நான் முதலில் தடுப்புக்காவல் மையம் செல்வேன் – அஷோக் கெலாட்
ஜெய்ப்பூர், பிப்ரவரி-15
எனது பெற்றோர்கள் பிறந்த இடம் எனக்கு தெரியாது என்னை தடுப்புக்காவல் மையத்திற்கு அனுப்புங்கள் என குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆவேசமாக பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது:
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது, மேலும் அதை திரும்பப் பெற முன்வர வேண்டும், இதனால் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேண முடியும்.
எனது பெற்றோரின் பிறப்பிடம் எனக்கு தெரியாது. நீங்கள் உறுதியாக இருங்கள், இதுபோன்ற நிலை வந்தால் நான் முதலில் தடுப்புக்காவல் மையம் செல்வேன். அசாமில் உள்ள பாஜக அரசு என்ஆர்சியை செயல்படுத்த மறுத்துள்ளது.
ஒரு சட்டத்தை உருவாக்குவது ஒரு அரசாங்கத்தின் உரிமை, ஆனால் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப ஒரு அரசாங்கம் ஆட்சி செய்ய வேண்டும். டெல்லியின் ஷாஹீன் பாக் போலவே, ராஜஸ்தான் உள்பட நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மக்களின் பொதுவான உணர்வுகளை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.