ஜம்மு-காஷ்மீர் குறித்த துருக்கி அதிபரின் கருத்தை நிராகரித்தது இந்தியா

டெல்லி, பிப்ரவரி-15

பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டபோது ஜம்மு-காஷ்மீர் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் 2 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பின் போது, காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு தனது நாடு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து இருந்தார்.

அதிபர் எர்டோகன், கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை குறிப்பிட்டு எங்கள் காஷ்மீர் சகோதர சகோதரிகள் பல தசாப்தங்களாக அசவுகரியங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் துருக்கி நீதி, அமைதி மற்றும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து துணை நிற்கும் என கூறி இருந்தார்.

ஜம்மு-காஷ்மீர் குறித்த துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறி இருப்பதாவது: துருக்கியின் ஜம்மு-காஷ்மீர் பற்றிய அனைத்து கருத்துக்களையும் நிராகரிக்கிறோம்.  இது இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் அழிக்க முடியாத பகுதியாகும்.

இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கும் அதன் பிராந்தியத்திற்கும் பயங்கரவாதத்தால் ஏற்பட்டு உள்ள கடுமையான அச்சுறுத்தல் உள்ளிட்ட உண்மைகளைப் பற்றிய சரியான புரிதலை வளர்த்துக் கொள்ளவும் துருக்கி அதிபருக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *