இந்திய பயணத்தை எதிர்பார்க்கிறேன்: டிரம்ப்
வாஷிங்டன், பிப்ரவரி-15
இந்திய பயணத்தை எதிர்பார்த்து கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இரண்டு நாள் அரசு முறை பயணமாக, பிப். 24 மற்றும் 25-ல் இந்தியா வருகிறார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அதிபர் டிரம்ப்பிற்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
இதன் பின்னர், புதிதாக கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து டிரம்ப்பும், பிரதமர் மோடியும் பேச உள்ளனர்.
இது தொடர்பாக டிரம்ப், ட்விட்டரில் வெளியிட்ட பதிவு: ”பெரிய பெருமை என நினைக்கிறேன். பேஸ்புக்கில் டிரம்ப் முதலிடத்தில் உள்ளதாகவும், பிரதமர் மோடி இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் சமீபத்தில் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார். உண்மையில், இன்னும் இரண்டு வாரத்தில் இந்தியா செல்ல உள்ளேன். இந்த பயணத்தை எதிர்பார்த்து கொண்டுள்ளேன்.” இவ்வாறு அந்த பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.