சிஏஏ போராட்டத்தின் போது முதியவர் யாரும் இறக்கவில்லை-காவல்துறை விளக்கம்

சென்னை, பிப்ரவரி-15

குடியுரிமைத் திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும், சிஏஏவுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா பகுதியில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த வடக்கு மண்டல இணை கமிஷனர் கபில்சிபில்குமார், பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து மீண்டும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் லேசான தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் போராட்டக்காரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இதற்கு சென்னை மாநகர போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “70 வயது மதிக்கத்தக்க பெரியவர் இயற்கையாக மரணம் அடைந்ததை, வண்ணாரப்பேட்டை CAA போராட்டத்தின்போது இறந்துவிட்டதாக சிலர் தவறுதலாக வேண்டுமென்றே பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். யாரும் இறக்கவில்லை. எச்சரிக்கை தேவை. இறந்துவிட்டார் என்ற பொய் தகவலை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *