கோவையில் திமுகவின் முழு அடைப்பு போராட்டத்துக்கு தடை

சென்னை, செப்டம்பர்-25

கோவையில் சொத்துவரி உயர்வை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் செப்-27ம் தேதி நடைபெறவிருந்த முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோவை மாநகராட்சியில் 100 சொத்துவரி உயர்வை ரத்து செய்யக்கோரியும், குடிநீர் பராமரிப்பு ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்தும் வரும் 27-ம் தேதி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரி தினேஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சொத்து வரி உயர்வை சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளதாகவும், வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி கோவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனு மீது தமிழக அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *