ஓபிஎஸ்-ன் 10வது பட்ஜெட் யாருக்கும், எதற்கும் பத்தாத பட்ஜெட்- ஸ்டாலின்

சென்னை, பிப்ரவரி-14

நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள பத்தாவது பட்ஜெட் யாருக்கும், எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணைமுதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் தாக்கல் செய்யும் 10ஆவது பட்ஜெட் இதுவாகும்.

இந்நிலையில், பட்ஜெட் உரைக்கு பின்னர் தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 196 நிமிடங்கள் வாசித்துள்ளார். முன்னதாக, மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 159 நிமிடங்கள் வாசித்தார். இதிலிருந்தே தெரிகிறது. மத்திய பாஜக அரசை, தமிழக அதிமுக அரசு எவ்வாறு பின்பற்றுகிறது என்று. 

ஓ.பி.எஸ். தான் தற்போதைய அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்று தியானம் செய்தார், நீதிமன்றம் சென்றார். எனவே, அவருடைய 10வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத, எதற்கும் பத்தாத பட்ஜெட் ஆக இருக்கிறது 

இது அதிமுக ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கையாக இருக்கும். அதிமுக அரசில் நிதி, வருவாய் பற்றாக்குறை, கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

திமுக ஆட்சியில் இருக்கும்போது கடன் சுமை ரூ. 1 லட்சம் கோடி. தற்போது அதிமுக அரசில் இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது ஒரு மனிதனின் கணக்கில் 57,000 ரூபாய் என்ற அளவில் கடன் சுமை இருக்கிறது. அதுமட்டுமின்றி, அதிமுக அரசில் தலைமை செயலகம் முதல் கிராம நிர்வாக அலுவலகம் வரை ஊழல், லஞ்சம் மூழ்கியிருக்கிறது. 

இந்த பட்ஜெட்டில் எந்த தொலைநோக்குத் திட்டமும் வளர்ச்சி திட்டமும் இல்லை. டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக இருக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு இவ்வாறு ஸ்டாலின் பேசினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *