தமிழக பட்ஜெட் 2020: வேளாண் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு, என்னென்ன அறிவிப்புகள்

சென்னை, பிப்ரவரி-14

தமிழக பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 11,894.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (பிப்.14) தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார்.

பட்ஜெட் உரையில் வேளாண் துறைக்கான அறிவிப்புகள்:

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் திருந்திய நெல் சாகுபடி முறையானது 2020- 21 ஆம் ஆண்டில் 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்.

11.1 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு நேரடி நெல் விதைப்பு முறை, நாகப்பட்டினம், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நெல், சிறு தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் பருத்தி ஆகியவற்றில் அதிக விளைச்சல் மேற்கொள்ளப்படும்.

நிலையான கரும்பு உற்பத்திக்கு ரூ.12 கோடி செலவில் 74,132 ஏக்கர் பரப்பளவில், நீடித்த நவீன கரும்பு சாகுபடிக்காக புதிய ரகங்கள் அறிமுகம்.

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.68.35 கோடி சிறப்பு கூடுதல் நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ.75 கோடி ஒதுக்கீடு.

கரும்பு உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.165 கோடி நிதி ஒதுக்கீடு.

ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாடு உழவர்- உற்பத்தியாளர் திட்டத்துக்கு ரூ.100.56 கோடி நிதி.

அடுத்த 3 ஆண்டுகளில் 250 ஏக்கர் கொண்ட 10 ஆயிரம் நிலத்தொகுப்புகள் தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி வளர்ச்சி இயக்கத்தின் கீழ் மேம்படுத்தப்படும்.

ரூ.180 கோடி நிதியில் 7.5 லட்சம் பரப்பளவு கொண்ட 3 ஆயிரம் நிலத்தொகுப்புகள் பயனடையும்.

ரூ.20 கோடி நிதியில் பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் கொல்லும் மேலாண்மை நடவடிக்கை.

விவசாயிகள், துறை அதிகாரிகளைத் தொடர்புகொள்ள உழவர்-அலுவலர் தொடர்புத் திட்டம்

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் மாநில அரசின் பங்காக 724.14 கோடி ரூபாய் நிதியுடன் செயல்படுத்தப்படும்.

இந்த கல்வியாண்டில் ரூ.1,844.97 கோடி செலவில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர்ப் பாசனத்தின் மூலம் பயன்பெறும்.

பயன் தரும் தோட்டக் கலைப் பயிர்களுக்கு ரூ.18 கோடியில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். கடலூரில் முந்திரி, பெரம்பலூரில் வெங்காயம், தேனியில் முருங்கை, ஈரோட்டில் மஞ்சள், தென்காசியில் எலுமிச்சை, தூத்துக்குடியில் மிளகாய் ஆகிய மையங்கள் அமைக்கப்ப்படும்.

தோட்டக் கலை சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு 325 மெட்ரிக் டன்கள் காய்கறி விதைகள் வழங்கப்படும்.

ரூ.200 கோடி மதிப்பில் வட்ட அளவில் 100 மற்றும் கிராம அளவில் 250 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும்.

தனித்தியங்கும் சூரிய சக்தி பம்புசெட்டுகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *