அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை, பிப்ரவரி-14

அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டசபை கூடியதும் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2020-2021-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 10-வது பட்ஜெட் இதுவாகும். 

சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் மின்சாரப் பேருந்து வசதி தொடங்கப்பட்டது. அதில் குளிர்சாதன வசதி, சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி, பேருந்து நிறுத்தத்தை ஒலிப்பெருக்கி மூலம் சொல்லும் வசதி ஆகியவை இடம்பெற்றிருந்தன.

எரிபொருள் பேருந்துகளை இயக்க ஆகும் செலவு, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருதியும் மின்சாரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதுதவிர பயணிகள், ஊழியர்கள் பாதுகாப்பு, குற்றச் சம்பவங்களைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தவேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் ‘அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று அறிவித்தார்.

நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். 525 மின்சாரப் பேருந்துகள் வாங்க 960 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசுப் பேருந்துகளில் மின்னனு பயணச் சீட்டு முறை கொண்டுவரப்படும். பணமில்லாப் பரிவர்த்தனையில் பயணச்சீட்டு பெறும் முறை அமல்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *