வெளியுறவுத் துறையின் 2 நிறுவனங்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் பெயரை சூட்டியுள்ளது மத்திய அரசு

டெல்லி, பிப்ரவரி-13

மத்திய வெளியுறவுத் துறையின் கீழ் வரும் இரு முக்கியமான நிறுவனங்களுக்கு மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெயரை மத்திய அரசு சூட்டியுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜின் 68-வது பிறந்த நாள் நாளை பிப்ரவரி-14ம் தேதி வருவதையொட்டி, மத்திய அரசு அவரின் பெயரை சூட்டியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பாஜக தலைமையிலான அரசு முதல் முறையாக அமைந்தபோது, அதில் வெளியுறவுத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர் சுஷ்மா ஸ்வராஜ்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ” மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மதிப்பிட முடியாத சேவைகள், இந்தியர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களில் இருந்து அவர்களை காத்தது போன்றவற்றால் மத்திய வெளியுறவு துறையின் இரு புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு சுஷ்மா ஸ்வராஜின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், பல ஆண்டுகளாக மக்கள் சேவையில் இருந்த அவரை பெருமைப்படுத்தும் வகையில் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள தி பிரவாசி பாரதிய கேந்திரா எனும் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிறுவனம் இனிமேல் சுஷ்மா ஸ்வராஜ் பவன் என்று அழைக்கப்படும். அதேபோல, வெளியுறவு சேவை நிறுவனம் (தி ஃபாரின் சர்வீஸ் இன்ஸ்டிடியூட்) இனிமேல் சுஷ்மா ஸ்வராஜ் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபாரின் சர்வீஸ் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *