இந்தியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!!!
கொல்கத்தா, பிப்ரவரி-13
பாங்காங்கில் இருந்து இந்தியா திரும்பிய 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணம், வுஹான் நகரில் உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் உருவானது. அந்த வைரஸ் சீனா மட்டுமின்றி, 27 நாடுகளுக்கு வேகமாக பரவியுள்ளது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1355 ஆக உயர்ந்துள்ளது. 59,805-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை, கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த பாதிப்பை மாநில பேரிடராக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
இந்நிலையில், பாங்காக்கில் இருந்து விமானத்தின் மூலம் டெல்லி திரும்பிய ஒருவருக்கும், கொல்கத்தாவை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.