புரட்சிகரமான இடத்தை பிடித்துவிட்டார் புதுவை முதல்வர் நாராயணசாமி-மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை, பிப்ரவரி-13

வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம், புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தை பிடித்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்ப பெறக் கோரும் தீா்மானம் புதுவை சட்ட பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூலில், வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம், புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தைப் பிடித்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி!

புதுவை துணைநிலை ஆளுநரின் அச்சுறுத்தலை புறந்தள்ளி, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் – சமூகநீதியை காப்பாற்றும் இடஒதுக்கீடு தீர்மானம் – ஆகிய முக்கியமான தீர்மானங்களை, சட்டப்பேரவையில் நிறைவேற்றியதன் மூலம் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி போன்ற உயர்ந்த கோட்பாடுகளின் மீது, தனக்கு இருக்கும் ஆழ்ந்த பற்றுதலை கம்பீரமான முறையில் வெளிக்காட்டியிருக்கிறார் புதுவை முதல்வர்.

“இதற்காக எனது ஆட்சியே போனாலும் கவலை இல்லை” என்று, தலைவர் கலைஞர் அவர்களின் பாணியில் அவர் கொண்டிருக்கும் அஞ்சாமையை, மனமார பாராட்டி, வாழ்த்துகிறேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *