நாங்குநேரியில் எம்.பி.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டி?

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாங்குநேரியில் கன்னியாகுமாரி எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவே இரு தொகுதிகளிலும் போட்டியிடும் என பேசி வந்த நிலையில், காங்கிரஸ் மேலிட தலையீட்டால் நாங்குநேரியை காங்கிரசுக்கு கொடுத்தது. திமுகவிடம் போராடி பெற்ற நாங்குநேரி தொகுதியில் யாரை நிறுத்தலாம் என்ற குழப்பம் காங்கிரசில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

என் மூலமாகதான் நாங்குநேரி தொகுதி காங்கிரசுக்கு கிடைத்தது என்றும், அதனால் அந்த தொகுதியில் நானே போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் கூறி வருகிறார். இதனிடையே, நாங்குநேரி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து ராஜினாமா செய்து கன்னியாகுமரி எம்.பி.யாக வெற்றி பெற்ற வசந்தகுமார் தன் மகன் விஜய் வசந்தை நிறுத்தவேண்டும் என கூறுவதாக சொல்லப்படுகிறது.

இரு தரப்பினரும் தாம் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெறுவோம் என வசனமும் பேசி வருகின்றனர். வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரசில் ஏட்டிக்கு போட்டியே நிலவி வருகிறது. இந்த நிலையில், நாங்குநேரி தொகுதியை வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த்க்கு கொடுக்க காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *