கெஜ்ரிவால் பதவியேற்பு விழா: பிற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு இல்லை
டெல்லி, பிப்ரவரி-13
கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிற மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என கோபால் ராய் தெரிவித்து உள்ளார்.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 8-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது.
பா.ஜ.க. 8 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லி முதல்வராக 3-வது முறையாக கெஜ்ரிவால் பதவியேற்கிறார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற 16-ந் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதனிடையே, அக்கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பிற மாநில முதவர்களுக்கோ அல்லது அரசியல் கட்சி தலைவர்களுக்கோ அழைப்பு இல்லை.
அவரது தலைமை மீது நம்பிக்கை கொண்ட டெல்லி மக்கள் முன்னிலையிலேயே கெஜ்ரிவால் பதவி பிரமாணம் செய்து கொள்வார் என கூறினார்.