தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்- புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு

சென்னை, பிப்ரவரி-13

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. சட்டசபை தொடங்கியதும் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டசபையின் 2020-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சட்டசபை தொடங்கியதும் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளதால் அதை மனதில் வைத்து இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குடிமராமத்து பணிக்கு வரவேற்பு உள்ளதால் இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நிகராக தேர்வாய் கண்டிகையில் புதிய நீர்ப்பிடிப்பு ஏரி உருவாக்கப்பட்டு வருவதற்கு இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது.

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சபையின் அலுவல் ஆய்வு குழு கூடி பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யும்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் குரூப்-4 தேர்வு முறைகேடு, குடியுரிமை திருத்த சட்ட பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக காணப்படும். அ.தி.மு.க. ஆட்சி காலம் அடுத்து ஆண்டு மே மாதம் நிறைவடைய உள்ளது. அதன்பிறகு பொதுத்தேர்தல் நடைபெறும்.

இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். எனவே நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தான் அ.தி.மு.க. ஆட்சியின் முழு பட்ஜெட் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *