இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பயமும் இல்லை, சவாலும் இல்லை
சென்னை, செப்டம்பர்-25
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என முதலவர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
தமிழகம் மற்றும் கேரளா இடையே முல்லை பெரியாறு, பரம்பிக்குளம்-ஆழியாறு, நெய்யாறு நதிநீர் பங்கீடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேரளாவுக்கு சென்றுள்ளார்.

திருவனந்தபுரம் கிழக்கு துறைமுக சாலையில் உள்ள விடுதியில் நடைபெறும் இந்த சந்திப்பில் நதிநீர் பங்கீடு தொடர்பாக பேசி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் கேரள பயணத்தில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தலைமை செயலர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் பேசி தீர்ப்பதற்காக கேரளா செல்கிறேன், தமிழக-கேரள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைவதற்காகவே இந்த சந்திப்பு நடைபெறுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இதேபோல், காவேரி நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடகா முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதா? என நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, காவேரி தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு செயல்படவேண்டும் என்றும், காவேரியில் இருந்து மாதாந்திர வாரியாக தண்ணீர் திறந்துவிடப்படுவதாக தெரிவித்தார். இரு தொகுதி இடைத்தேர்தலை கண்டு அதிமுகவுக்கு பயம் இல்லை எனவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்தால் திமுக வெற்றி பெறாது என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனவும் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.