நீதி மீதான நம்பிக்கை இழந்து விட்டோம் – நிர்பயாவின் தாய் கண்ணீர்

டெல்லி, பிப்ரவரி-12

நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இழந்து வருகிறோம் என நிர்பயா தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

குற்றவாளிகள் தரப்பில் மாறி மாறி கருணை மனு, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றம் 2 முறை தள்ளிப்போனது.

இதற்கிடையே, நிர்பயாவின் பெற்றோர் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண வாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.  இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக நிர்பயாவின் பெற்றோர் இன்று நீதிமன்றத்துக்கு வந்தனர்.

அதன்பின், அவர்கள் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது: குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்பதில் நம்பிக்கை மற்றும் உறுதியை இழந்து நிற்கிறேன். என் மகளுக்கு நீதி கிடைக்க நான் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த குற்றவாளிகள் தந்திரங்களை பயன்படுத்தி தண்டனையை தாமதப்படுத்தி வருகின்றனர்.

தண்டனையை தாமதிக்க முயல்கின்றனர் என்பதை நீதிமன்றம் ஏன் புரிந்துகொள்ளவில்லை, நீதி மீதான நம்பிக்கையை இழந்து வருகிறோம். 7 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறேம். குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்குங்கள் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *