சூழ்ச்சிகளை தாண்டி 2021-ல் விஜயகாந்த் தலைமையில் ஆட்சியை பிடிப்போம்-பிரேமலதா

சென்னை, பிப்ரவரி-12

தேமுதிகவின் 20-ம் ஆண்டு கொடி நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள 118அடி உயர கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்றினார்.

பின்னர் தொண்டர்கள் அனைவருக்கும் லட்டு வழங்கினார். இதில் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் பார்த்தசாரதி, எல்.கே சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தொண்டர்கள் முன்னிலையில் விஜயகாந்த் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.

விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: ஒட்டு மொத்த இளைஞர்கள், தளபதிகளை கொண்ட ஒரே இயக்கம் தே.மு.தி.க. தான். வீடு தேடி ரே‌ஷன் பொருட்கள் வரும் என்பதை முதன் முதலில் விஜயகாந்த் கூறியதை தான் ஜெகன்மோகன் ரெட்டி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் பின்பற்றி வருகின்றனர்.

இனி வரும் காலங்களில் மக்கள் தே.மு.தி.க.விற்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும், கூட்டணி தர்மத்தை மதிக்கின்ற கட்சி தே.மு.தி.க. அதை கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் அது எதிர் அணிக்கு சாதகமாகி விடும், வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்த முதல்வருக்கு நன்றி.

நல்ல ஆட்சியை மக்கள் புரிந்துகொண்டு மாற்றத்தை கொண்டு வரவேண்டும். ஜாதி, மொழியின் பெயரை சொல்லி மக்களை துண்டாடும் அரசு தான் நாடு முழுவதும் இருந்து வருகிறது. எத்தனையோ சோதனைகள், சூழ்ச்சிகள் வந்தாலும் தே.மு.தி.க. என்ற கட்சி வருகிற 2021-ம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று கேப்டன் தலைமையில் நல்லதொரு ஆட்சியை மக்களுக்கு தருவோம் என்றார்.

இறுதியாக விஜயகாந்த் பேசுகையில், “அனைவருக்கும் என்னுடைய கொடி நாள் வாழ்த்துக்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *