நாங்குநேரி-நாராயணன், வி.வாண்டி-முத்தமிழ்செல்வன்

சென்னை, செப்டம்பர்-25

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் நா.புகழேந்தி போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கடந்த 22, 23 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கடசி தலைமையகத்தில் வழங்கினர். இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் -24) அன்று விருப்ப மனு அளித்தவர்களிடம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேர்காணல் நடத்தப்பட்டது.

நேர்காணலை தொடர்ந்து, வேட்பாளர் தேர்வுக்காக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டமும் நடைபெற்றது. இதனையடுத்து, நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25-ம் தேதியன்று அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய கழகச் செயலாளராக இருக்கும் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் விக்கிரவாண்டி தொகுதியிலும், நெல்லை மாவட்ட புறநர்கர் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருக்கும் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *