ஒரு தலை காதலால் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தனி காவல் பிரிவு- பா.ம.க. நிழல் பட்ஜெட்

சென்னை, பிப்ரவரி-12

பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கையில் ஒருதலை காதல் என்ற பெயரில் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவதை தடுக்க தனிக் காவல் பிரிவு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 2003-04 ஆம் ஆண்டு முதல் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான, 18-வது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை சென்னை தியாகராயர் நகர் கட்சி அலுவலகத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உலகத்தர உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்குதல், வேளாண்மைக்கு பாதுகாப்பு அளித்தல், பாசன பரப்பை இருமடங்காக்குதல், வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்தல், மகளிர் பாதுகாப்பு, வறுமை ஒழிப்புக்காக ஏழைகளுக்கு நிதியுதவி, தொழில் வளர்ச்சியை அதிகரித்தல், நிர்வாக சீர்திருத்தம், வெளிப்படைத்தன்மை ஆகிய 10 அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்து பொது நிழல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.

பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

தமிழ்நாட்டில் மகளிர் நாளான மார்ச் 8-ந் தேதி முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறை படுத்தப்படும்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ, குரூப்-4 ஆகியவற்றில் நடைபெற்றது போன்ற முறைகேடுகள் நடப்பதை தடுக்க தேர்வாணைய செயல்பாடுகளில் முழு அளவில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.

ஒவ்வொரு தேர்வு அமைப்பிலும் குறைந்தபட்சம் 5 உறுப்பினர்கள் அரசால் நியமிக்கப்படுவர். அவர்களில் ஒருவர் சமூக நீதியில் அக்கறை கொண்டவராக இருப்பார்.

சென்னையில் அனைத்து நகர பேருந்துகளிலும் அனைவருக்கும் பேருந்து பயணம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டு அத்திட்டம் வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்தகட்டமாக சென்னை தவிர்த்த மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஆவடி, வேலூர், ஈரோடு, ஓசூர், திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய 14 மாநகராட்சிகளில் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். காவல்துறையினருக்கு 8 மணிநேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.

ஒருதலை காதல் என்ற பெயரில் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவதை தடுக்க தனி காவல் பிரிவு ஏற்படுத்தப்படும். இந்த பிரிவுக்கு தமிழக காவல்துறையில் உள்ள மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி தலைவராக நியமிக்கப்படுவார்.

அதிகாரிகள் முதல் முதலமைச்சர் வரை அனைவரும் தங்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்று கொள்வதை உறுதி செய்வதற்காக தமிழ் நாடு பொறுப்புடைமை ஆணையம் என்ற புதிய சட்டபூர்வ அமைப்பு ஏற்படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *