பொருளாதாரம், சமூக முன்னேற்றம் இரண்டிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது-முதல்வர் பழனிசாமி

ஸ்ரீபெரும்புதூர், பிப்ரவரி-12

புதிய தொழிற்சாலைகள் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணதாங்கல் கிராமத்தில் சியட் நிறுவனத்தின் சார்பில் டயர் உற்பத்தி தொழிற்சாலை தொடக்கவிழா நடைபெற்றது.

விழாவில் டயர் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கி வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, கடந்த 2018 ஜூலை மாதம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் 18 மாத காலத்திற்குள் ரூபாய் 4000 கோடி முதலீட்டில் 1000 பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

இதில் 40 சதவீதம் பேர் பெண்கள் என்பதும், மிக விரைவாக உற்பத்தியை தொடங்கியமைக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் பல டயர் உற்பத்தி நிறுவனங்கள் இருக்கும் நிலையில் இந்தியாவிலேயே டயர் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

இந்திய அளவில் தமிழகத்தில்தான் 40 சதவீத டயர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பதும், இந்நிலையில் இந்நிறுவனம் மற்றொரு மணி மகுடமாக திகழும்.

தடையில்லா மின்சாரம், போதிய மனித வளம், அற்புதமான சந்தை வாய்ப்பு, சரக்கு போக்குவரத்து கட்டமைப்பு என அனைத்து வசதிகளும் உள்ள மாநிலமாக திகழ்வதால் புதிய தொழிற்சாலைகள் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

இந்நிறுவனம் விரைவாக உற்பத்தியை தொடங்க தமிழக அரசின் ஒத்துழைப்பும் காரணம். இந்நிறுவனம் நாளொன்றுக்கு 30 ஆயிரம் கார் டயர்களை உற்பத்தி செய்யும் நிலையில் தற்போது உள்ளது. மேலும் இந்நிறுவனம் ஆராய்ச்சி நிறுவனத்தை விரைவில் சென்னையில் துவங்க வேண்டும்.

சில மாநிலங்கள் சமூக முன்னேற்றத்திலும், சில மாநிலங்கள் பொருளாதாரத்தில் முன்னேறி வரும் நிலையில் தமிழகம் இவை இரண்டிலும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் நின்றுபோன பல்வேறு தொழிற்சாலைகள் மீண்டும் புதுப்பித்து திறக்கப்பட்டு வருகின்றன என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *