மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.147 உயர்வு

சென்னை, பிப்ரவரி-12

2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ.590.50 ஆக இருந்த மானியமில்லா சிலிண்டர் விலை தொடர்ந்து 6 முறை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலாகிறது. எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதம்தோறும் திருத்துகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக மாற்றமில்லாமல் இருந்த விலை தற்போது மாறியுள்து.

சென்னையில் 734 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாதம் 881 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிலிண்டரின் விலை 147 ரூபாய் உயர்ந்துவிட்டது.

இன்று முதல் இந்த விலையேற்றம் அமலுக்கு வருகிறது என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பதால் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் 858.50 ரூபாயாகவும் (144.50 ரூபாய் உயர்வு) கொல்கத்தாவில் 896 ரூபாயாகவும் (149 ரூபாய் அதிகம்) மும்பையில் 829.50 ரூபாயாகவும் (145 ரூபாய் ஏற்றம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு செப்டம்பரில் 590.50 ரூபாயாக இருந்த மானியமில்லாத சிலிண்டர் விலை தொடர்ந்து ஆறு முறை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 6 மாதங்களில் 290.50 ரூபாய் அதிகரித்துள்ளது. இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *