சி.ஏ.ஏ.வுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
புதுச்சேரி, பிப்ரவரி-12
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூவரும் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்கள் முற்றிலும் சட்டப்பேரவை நிகழ்வுகளை புறக்கணித்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடியதும் மறைந்த எம்.எல்.ஏ.க்கள் புருஷோத்தமன், ராமநாதன் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தை எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் பேசினர். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் பேசியதாவது: “நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் மக்கள் அனைவரிடமும் வேதனையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இச்சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்ட அடிப்படையாக திகழ்வது மதச்சார்பின்மை. அதை இச்சட்டம் சிதைக்கிறது.
அதேபோல் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்கள் இடம் பெறவில்லை. நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்”. இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.