ஆம் ஆத்மி வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும்-ப.சிதம்பரத்திற்கு பிரனாப் முகர்ஜியின் மகள் கேள்வி

டெல்லி, பிப்ரவரி-12

நமது தோல்வி பற்றி கவலை கொள்ளாமல் ஆம் ஆத்மி வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும் என ப. சிதம்பரத்திற்கு குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.வுக்கு 8 இடங்கள் கிடைத்தன.  காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்து உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில், ‘‘ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று உள்ளது. ஏமாற்று வேலை மற்றும் வெற்று கோ‌ஷம் தோல்வி அடைந்து உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லியில் வாழும் மக்கள், பா.ஜ.க. ஆபத்து மிகுந்த பிரித்தாளும் சூழ்ச்சி மற்றும் வகுப்புவாத அரசியல் திட்டங்களை தோற்கடித்து உள்ளனர். 

மேலும் ‘டெல்லி ஒரு மினி இந்தியா என்பதால் அம்மாநில தேர்தல் அகில இந்திய வாக்கெடுப்புக்கு ஒப்பானது’ எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, ப. சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் செய்தியை பதிவிட்டு, அதற்கு கேள்வி எழுப்பும் வகையில் தனது பதிவை வெளியிட்டுள்ளார்.  அந்த ட்விட்டரில், பா.ஜ.க.வை வீழ்த்தும் பணி மாநில கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டு உள்ளதா? என பணிவுடன் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

அப்படி இல்லை எனில், நமது தோல்வியை பற்றி கவலை கொள்ளாமல் ஆம் ஆத்மி வெற்றியை ஏன் நாம் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டும்?  ஆம் எனில், நம்முடைய மாநில காங்கிரஸ் கட்சிகளை மூடி விடலாம் என தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *