பழிக்குப்பழி தீர்த்த நியூசி…இந்தியாவை ஒயிட் வாஷ் செய்து அபார வெற்றி

மவுண்ட் மாங்கனு, பிப்ரவரி-11

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் அனைத்து போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று ஒயிட்வாஷ் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. ஹாமில்டனில் நடந்த முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து, ஆக்லாந்தில் நடந்த 2-வது போட்டியில் 22 ரன் வித்தியாசத்தில் வென்று 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில் 3-வது ஒருநாள் போட்டி மவுன்ட் மவுங்கானுவில் இன்று நடந்தது. 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி 112 ரன்களை குவித்தார்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதல் பதற்றமின்றி விளையாடியது. தொடக்க வீரர் கப்தில் 66 ரன்களும், நிகோல்ஸ் 80 ரன்களும், கிரான்ட்ஹோம் 58 ரன்களும் சேர்க்கவே, 48-வது ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 300 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. போட்டி நாயகனாக நிகோல்ஸும், தொடர் நாயகனாக டெய்லரும் அறிவிக்கப்பட்டனர். டி20 தொடரை 5-0 என்று இந்திய அணி ஒயிட்வாஷ் செய்த நிலையில் ஒரு நாள் தொடரை 3-0 என நியூசிலாந்து ஒயிட்வாஷ் செய்து பதிலடி கொடுத்துள்ளது.

இந்திய அணி கடைசியாக 1989 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் 5-0 என்ற தொடரில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *