டெல்லியில் காங்கிரஸ் நசுக்கப்பட்டுவிட்டது-குஷ்பு விரக்தி

டெல்லி, பிப்ரவரி-11

டெல்லியில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு விரக்தியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. இதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனென்றால், ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் கட்சி முன்னிலை பெறவில்லை.

இதனிடையே, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி குறித்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், “டெல்லியில் காங்கிரஸுக்காக எந்த மாயாஜாலத்தையும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் நசுக்கப்பட்டுவிட்டது. நாம் போதுமானதை செய்கிறோமா, நாம் சரியானதை செய்கிறோமா, நாம் சரியான பாதையில் இருக்கிறோமா என்று கேட்டால் இல்லை என்றே பெரிதாக பதில் வரும்.

நாம் இப்போதே பணியை தொடங்க வேண்டும். இப்போது இல்லையென்றால் எப்போதும் முடியாது. அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை விஷயங்களை சரி செய்ய வேண்டும். ஆனால் மக்கள் வெறுப்பு விஷம் நிரம்பிய ஆபத்தான மோடியின் அராஜக கும்பலை நிராகரித்துள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *