பா.ம.க.வின் 2020-2021 ம் ஆண்டிற்கான வேளாண் நிழல் பட்ஜெட்டை வெளியிட்டார் ராமதாஸ்

சென்னை, பிப்ரவரி-11

சென்னையில் பாமக கட்சி அலுவலகத்தில் பாமக சார்பாக தயார் செய்யப்பட்ட வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். வழக்கம்போல பாமகவின் நிதிநிலை அறிக்கையை அங்கிருந்த பெண் செய்தியாளர் ஒருவர் பெற்றுக்கொண்டார்.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுதான் பா.ம.க.வின் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மையக்கரு ஆகும்.

முக்கிய அம்சங்கள்

 • வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு
 • வேளாண்மையை இலாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற சிறப்புத் திட்டம்செயல்படுத்தப்படும்.
 • பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்க வகை செய்யப்படும்.
 • இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000, கரும்புக்கு ரூ.90,000, நிலக்கடலைக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.
 • 10. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி வேலைவழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150ஆகவும், ஒருநாள் ஊதியம் ரூ.275ஆகவும் உயர்த்தப்படும்.
 • காலநிலை மாற்ற அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்படும்.
 • விவசாயிகளுக்கு வட்டியில்லாத பயிர்க்கடன் வழங்கப்படும்.
 • அடுத்த 3 ஆண்டுகளில் கரும்பு சாகுபடி பரப்பை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
 • 19. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய ரூ.1,500 கோடி வரும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரு தவணைகளாக வழங்கப்படும். இதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசு ரூ.1,500 கோடியை வட்டியில்லா கடனாக வழங்கும்.
 • வேளாண் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன், ஆண்டுக்கு 6% வேளாண் வளர்ச்சியை எட்ட தமிழக அரசு இலக்கு
 • தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதன் மூலம், கோடைக்காலங்களிலும் விவசாயம் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்குடன் புரட்சிகரமான நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.
 • கோதாவரி – காவிரி இணைப்புத்திட்டத்திற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படும்.
 • அத்திக்கடவு – அவினாசித்திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தி முடிக்கப்படும்.
 • மேட்டூர் அணையின் உபரிநீரை மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 10 பாசன ஏரிகளில் நிரப்பும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
 • 2020-21 ஆம் ஆண்டு முதல் 2023-24 வரை நீர்ப்பாசன நான்காண்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி செலவிடப்படும்.
 • கொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில், நிறைவடையும். கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் மொத்தம் 10 தடுப்பணைகள் கட்டப்படும்.
 • காவிரி மற்றும் அதன் கிளை நதிகளான அரசலாறு, திருமலைராஜன் ஆறு, குடமுருட்டி ஆறு, வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரில் பெரும்பகுதி வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டப்படும்.
 • பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில், மூலதனக் கடன்கள் தவிர ரூ.22,000 கோடி பயிர்க்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும்.
 • தமிழகத்தில் விளையும் அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் மாநில அரசே விலை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.
 • தமிழ்நாட்டில் உள்ள உழவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வகை உணவுதானியங்களுக்கான கொள்முதல் விலையை மாநில அரசே நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.  இதற்காக வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.
 • 46. 2020-21 ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.4,000 ஆக நிர்ணயிக்கப்படும்.
 • 2020-21 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2,806.98 என நிர்ணயிக்கப்படும்.
 • தமிழகம் ஹைட்ரோ கார்பன் திட்டம் இல்லாத மாநிலமாக திகழும்.
 • சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள தமிழக அரசு தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் புதிய தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 4 தோட்டக்கலைக் கல்லூரிகள் அதனுடன் இணைக்கப்படும்.
 • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பட்டுப்புழு வளர்ப்புப் பண்ணையில் புதிய பட்டுப்புழு வளர்ப்புக் கல்லூரி அமைக்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்.
 • தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். கோவையில் ஏற்கெனவே வேளாண் பல்கலைக் கழகம் உள்ள நிலையில், தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதியப் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும்.
 • நான்கு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படும்.
 • உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.25,000 மானியம் வழங்குதல்,  நிலங்களின் அளவுக்கு ஏற்ப உறுதி செய்யப்பட்ட வருமானம் கிடைக்க வகை செய்தல், துல்லிய பண்ணைத் திட்டத்தின் (Pricision Farming) மூலம் வருவாயை பெருக்குதல், உழவர்களுக்கு கடன் வழங்க நபார்டு வங்கியில் தனி அமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.
 • வேளாண்துறைக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு
 • வேளாண்மைக்குத் தேவையான  இடுபொருட்களை வாங்க வசதியாக சிறு, குறு உழவர்களுக்கு ஏக்கருக்கு, பருவத்திற்கு ரூ.5,000 வீதம் மூலதன மானியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
 • நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக நடப்பாண்டில் ரூ.25,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.50,000 கோடியாக இருக்கும்.
 • தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்துக் குவாரிகளும் உடனடியாக மூடப்படுகின்றன.
 • தஞ்சையில் நெல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்
 • சர்க்கரைத் தொழில்நுட்பம் (Bachelor of Sugar Technology) என்ற புதிய பட்டப்படிப்பு தொடங்கப்படும்.
 • சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதைவிட, அடியோடு அழிப்பதுதான் நிரந்தர தீர்வு ஆகும். பிரேசில், ஆஸ்திரேலியா, சிரியா ஆகிய நாடுகளில் கருவேல மரங்கள் ஒழிக்கப்பட்டு வருவதால், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 • தமிழ்நாட்டில் பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
 • வேளாண்மைக்கான இடுபொருட்களை இலவசமாக வழங்குவதே அரசின் கொள்கை. அதற்காகவும் உழவர்களுக்கான பிற செலவுகளுக்காகவும் ஏக்கருக்கு ரூ.10,000 மூலதன மானியம் வழங்கப்படும்.
 • கர்நாடகத்தில் உள்ளது போல தமிழகத்திலும் வேளாண் சந்தைக் கொள்கை உருவாக்கி வெளியிடப்படும். வேளாண் சந்தைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு அமைச்சர் நியமிக்கப்படுவார்.
 • டெல்லி, பெங்களூருவில் செயல்படுவது போன்று திருச்சியில், சஃபல் சந்தை (Safal Market) தொடங்கப்படும். இதன் மூலம் விளைப்பொருட்களை மின்னணு ஏலமுறையில் விற்பனை செய்யப்படும்.
 • ஒவ்வொரு மாநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் கோயம்பேடு சந்தைபோல் அமைக்கப்படும்.
 • தமிழ்நாட்டில் வேளாண் துறை சார்ந்த பணிகளைக் கவனிக்க வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் சந்தைத்துறை, நீர்வள மேலாண்மை என மொத்தம் 4 அமைச்சகங்கள் செயல்படும். ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் தனித்தனி அமைச்சர்கள் என மொத்தம் 4 அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்.
 • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நவீன மாட்டுப் பண்ணை ஆரம்பிக்கப்படும்.
 • தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டத்திற்கு பசுமைத் தமிழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
 • வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 69 தலைப்புகளில் 265 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். இவற்றை பா.ம.க.வின் திட்டங்களாக கருதாமல், வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *