சென்னை மாநகராட்சியின் மெகா சாலைகள் திட்டம்-அமைச்சர் S.P.வேலுமணி தொடங்கி வைத்தார்

சென்னை, பிப்ரவரி-11

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மாபெரும் சாலைகள் அமைக்கும் திட்டங்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் MEGA STREET என்ற பெயரில் மாநகரின் பல இடங்களில் சாலை சீரமைத்தல், புதிய சாலைகள் அமைத்தல் தொடர்பான தொடக்க விழா சென்னை லீலா பேலஸ் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மேலும், நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள மெகா சாலைகள் அனைத்திற்கும் சாலைகள் வடிவமைப்பு திட்டத்திற்கான வழிகாட்டுதல் கொள்கை புத்தகத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டார்.

முன்னதாக மெகா சாலைகள் திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள கண்காட்சியினையும் அமைச்சர் வேலுமணி பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் சண்முகம், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை பெறச்செய்தார். அதேபோன்று, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும் மிகுந்த அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை சீரிய முயற்சியில் செய்து வருகிறது.

தமிழக மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளான குடிநீர், சாலை, சுற்றுப்புறத் தூய்மை, தெருவிளக்குகள், சாலை மேம்பாட்டு பணிகள், துப்புரவு பணி ஆகியவற்றிற்கு அதிமுக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது.

உள்கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை திட்டமிடுதல், நிதி ஆதாரங்களை திரட்டுதல் மற்றும் திட்டத்தை கண்காணித்தல் போன்ற சிறந்த முறையில் அனைத்து பணிகளையும் அதிமுக அரசு செய்து வருகிறது.

தமிழ்நாட்டின் 50% மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். ஆகையால் நகர்ப்புற மேம்பாட்டு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் உலகத் தரத்திற்கு இணையாக அமைக்க வேண்டி உள்ளது. மேலும், சராசரியாக 30 % பொதுமக்கள் தினமும் நடந்து செல்வது, மிதிவண்டிகளில் செல்வது மற்றும் பொதுவாகனங்களில் செல்வது என்ற நடைமுறை அனைத்து நகர்ப்புறங்களிலும் உள்ளது.

ஆகவே பொதுமக்கள் பாதுகாப்பாக நடப்பதற்கு, மிதிவண்டிகளை ஓட்டுவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்யவேண்டியுள்ளது. இந்த பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 10 மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படவுள்ளது.

சென்னை மாநகராட்சி 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளையும், 5,525 கி.மீ. நீளமுள்ள 33,374 உட்புற சாலைகளையும் பராமரித்து வருகிறது. புதிய சாலைகள் அமைக்கும் போதும் பழைய சாலைகள் அனைத்தும் நவீன இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு, சென்சார் இயந்திரம் மூலம் சாலைகள் அமைக்கப்படும். மேலும், இந்த சாலைகள் அனைத்தும் மூன்றாம் நபர் தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் மூலம் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

சென்னை மாநகராட்சி இந்தியாவிலேயே முதல் நகரமாக வாகனமில்லா போக்குவரத்து கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பாக சாலைகளில் நடப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 150 கி.மீ. நீளத்திற்கு நடைபாதைகள், பேருந்து சாலைகள் அமைக்கப்பட்டு சுற்றுப்புற சூழல் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் பாராட்டப்படும் வகையில் பாதசாரிகள் வளாகம் சென்னை தி.நகரில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் மிதிவண்டி பகிர்மானத் திட்டம் அமல்படுத்தப்பட்டு மக்களின் சீரிய போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி பெரும் சாலைகள் என்ற சீரிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் பயன்கள், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் ஒரு நிலையை உண்டாக்குகிறது. இந்த திட்டம் மக்கள் இடையூறு இல்லாமல் நடப்பதற்கும், பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள், மிதிவண்டி உபயோகிப்பவர்கள் பாதுகாப்பான முறையில் செல்வதற்கு வழிவகை செய்கிறது. இந்த மாபெரும் சாலைகள் திட்டத்தினால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு சேவை நிறுவனங்கள் சாலைகளை வெட்டும் பணி முற்றிலுமாக தவிர்க்கப்படும்.

இந்த திட்டம் எல்லா வகையான பொதுமக்களின் நடமாட்டம், மிதிவண்டி ஓட்டம், பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், வாகன நிறுத்தம், வாகன நிறுத்த மேலாண்மை போன்றவையும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களில் எல்லா அம்சங்களும் உள்ளவாறு விளையாட்டு இடங்கள், குழந்தைகளுக்கான பூங்காக்கள், முதியோருக்கான இருக்கைகள், நிழல்தரும் மரங்கள், ஒளிதரும் விளக்குகள் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளது.

குடிநீர் குழாய்கள், மின்வடங்கள், மழைநீர் வடிகால்கள் போன்றவை சரியான முறையில் திட்டமிடப்பட்டு அமைக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பேருந்து சாலைகள் முழுமையாக மாற்றியமைக்கப்படும். 426 சதுர கி.மீ. பரப்பளவில் 400 கி.மீ. நீளமுள்ள பேருந்து சாலைகள் மற்றும் மற்ற துறைகளிடம் உள்ள 286 கி.மீ. நீளமுள்ள பிரதான சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும்.

இதன் முதற்கட்டமாக 70 சதுர கி.மீ. அடங்கிய 110 கி.மீ. நீளமுள்ள பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் அண்ணாநகர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி மற்றும் அடையார் போன்ற இடங்களில் செயல்படுத்தப்படும்.

இதுமட்டுமில்லாமல், இந்த திட்டம், தமிழக அளவில் கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், வேலூர் ஆகிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

இந்த நகரங்களில் பாதசாரிகளும், மிதிவண்டியில் பயணம் செய்பவர்களுக்கும் மற்றும் பொது வாகனங்களை பயன்படுத்துவோருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் விபத்துக்கள் குறைக்கப்பட்டு மக்கள் சிரமமின்றி நடக்க வழிவகை செய்யப்படும். கடந்த 9 ஆண்டுகளில் ரூ.36,317 கோடியில் 1.21 லட்சம் கி.மீ. நீளத்திற்கு சாலைகள் நகரப்புறத்திலும், கிராமப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *