நியூ.க்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி: கே.எல்.ராகுல் சதம் அடித்து விளாசல்

மவுன்ட்மாங்கானு, பிப்ரவரி-11

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கே.எல். ராகுல் சதம் அடித்து விளாசினார்.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஆக்லாந்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. 

இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது.  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா (40), மயங்க் அகர்வால் (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  அடுத்து ஆடிய கோலி (9), ஸ்ரேயாஸ் (62) ரன்களில் வெளியேறினர்.  இதன்பின் கே.எல். ராகுல், மணீஷ் பாண்டேயுடன் இணைந்து அதிரடியாக விளையாடி வருகிறார்.

அவர் 44 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த ஓவரை பென்னட் வீசினார்.  இதில் 2வது பந்தில் ராகுல் 2 ரன்களை எடுத்து சதம் பூர்த்தி செய்து உள்ளார்.  தொடர்ந்து இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 46 ஓவர்கள் முடிவில் 261 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *