ரஜினிக்கு மட்டும் வரிச்சலுகை…விஜய் வீட்டில் ரெய்டு ஏன்?-தயாநிதிமாறன்

டெல்லி, பிப்ரவரி-10

நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு நடந்த விவகாரம் குறித்து மக்களவையில் பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் ரஜினிக்கு வரிச்சலுகை விஜய்க்கு ரெய்டா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மீதான வருமான வரித்துறை வழக்கை சமீபத்தில் வருமான வரித்துறை வாபஸ் வாங்கியது. இந்நிலையில் ‘பிகில்’ பட விவகாரத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.

இதனை சீமான், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முத்தரசன் உள்ளிட்டோர் இதைக் கண்டித்தனர். இதுகுறித்து திமுக மட்டுமே கருத்து கூறாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய தயாநிதிமாறன், “தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. ரஜினிக்கு ரூ.1 கோடி வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. மிகச்சிறப்பு, உங்கள் நடவடிக்கை. ஆனால், நடிகர் விஜய் மீது ரெய்டு, அவர் படப்பிடிப்பு தளத்திலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து வரப்படுகிறார்.

படப்பிடிப்பு நிறுத்தப்படுகிறது. அவர்களுக்கு இதனால் நஷ்டம். இது என்ன நியாயம்” என்று தயாநிதிமாறன் கேள்வியெழுப்பினார். ரஜினியின் அடுத்த படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவர உள்ள நிலையில், விஜய் வீட்டில் ரெய்டு நடந்தது குறித்து திமுக வாய் திறக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தயாநிதி மாறன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *