தமிழகத்தில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்கள் கூடாது: மத்திய அமைச்சரிடம் ஜெயக்குமார் வலியுறுத்தல்

டெல்லி, பிப்ரவரி-10

டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழக மீன்வளத்துறை மற்றும் நிர்வாகத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து பேசினார். அப்போது காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான முதல்வரின் கடிதத்தை வழங்கினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது எனவும் மத்திய அரசுக்கு ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார். இவர்கள் சந்திப்பின் போது பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, அதிமுக எம்பிக்கள் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்: காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது என்பது வரலாற்றில் இடம்பெறக்கூடியதாகும். இது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியாகும்.

வேளாண் மண்டலம் குறித்த முதல்வரின் கோரிக்கை கடிதத்தை மத்திய அமைச்சரிடம் அளித்துள்ளோம். கோரிக்கையை பரிசீலனை செய்த பின், அடுத்த ஓரிரு நாளில் நல்ல பதிலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் மூலமாக தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இதில் டெல்டா மாவட்ட விவகாரம் தொடர்பாக முதல்வர் அறிவித்தது என்பதே அரசின் கொள்கை முடிவு தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. எதுவாக இருந்தாலும் மாநிலத்தின் நலன் பாதிக்கப்படாமல் அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் பழனிசாமி எடுப்பார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *