இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவது தான் ஆர்எஸ்எஸ், பாஜகவின் திட்டம்-ராகுல் காந்தி

டெல்லி, பிப்ரவரி-10

இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கனவை நனவாக்க விட மாட்டோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறினார்.

உத்தரகண்ட் மாநில அரசு கடந்த 2012-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் சில அரசுப் பணியிடங்களை நிரப்ப எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு இல்லாமல் அறிவித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அந்த அறிவிப்பை ரத்து செய்து இட ஒதுக்கீட்டுடன் அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டது

இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் உத்தரகண்ட் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.ஸி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை, இடஒதுக்கீடு வழங்கிடக்கோரி நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து உத்தரகண்ட் பாஜக அரசு திட்டமிட்டு இடஒதுக்கீட்டை சீர்குலைக்க நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியதாவது:

‘‘கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவது தான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் திட்டம். இது அவர்களின் டிஎன்ஏவிலேயே உள்ளது. இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கனவை நனவாக்க நாங்கள் விட மாட்டோம். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக காங்கிரஸ் ஒலிக்கும்.’’ எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *