போராட்டம் நடத்த உரிமை உண்டு: மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக் கூடாது

டெல்லி, பிப்ரவரி-10

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக்கில் நடத்தப்படும் போராட்டம் தெடார்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், போராட்டம் நடத்த உரிமை உள்ள அதேசமயம் மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் கவுல் மற்றும் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ஒரு சட்டம் குறித்து மக்களுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த அனைத்து உரிமையும் உள்ளது. இந்த சட்டம் பற்றிய வழக்கு ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் மக்கள் போராட்டம் தொடர்கிறது.

போராட்டம் நடத்த உரிமை உள்ள அதேசமயம் மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது. சாலைகளை மறிக்கக் கூடாது. இதுபோன்ற பகுதியில் நீண்டகாலமாக போராட்டம் நடத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

நீங்கள் தொடர்ந்து போராட விரும்பினால் அதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்ய வேண்டும். எனினும் இந்த வழக்கில் எதிர்தரப்பின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதுதொடர்பாக மத்திய அரசும், சம்பந்தப்பட்டவர்களும் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *