நாட்டின் பொருளாதாரம் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது-சிதம்பரம்

டெல்லி, பிப்ரவரி-10

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பேசிய ப.சிதம்பரம், பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க மோடி தலைமையிலான அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க தவறி விட்டது. மிகவும் திறமையற்ற, தகுதியற்ற டாக்டர்களால் பொருளாதாரம் ஐசியு.வுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

பொருளாதாரம் ஐசியு.,வில் இல்லை. அதனை இவர்கள் தான் வற்புறுத்தி தள்ளி உள்ளனர். அதனை வெளியில் கொண்டு வர தெரியாத தகுதியற்ற டாக்டர்கள், தங்களுக்கு தகுதி இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கு ஒரு சிறிய யோசனையை கூட முன்னெடுக்கவில்லை.  பணமதிப்பு நடவடிக்கை ரத்து முதல் தவறு, கோளாறான ஜிஎஸ்டி வரி அமலாக்கம் அடுத்தத் தவறு. பொருளாதாரம் படுமோசமான நிலையில் இருப்பதை மத்திய அரசு ஏற்க மறுப்பது தான் பிரச்சனை. தொடர்ந்து 6 காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி விதிதம் சரிந்து வருகிறது.

பொருளாதார ஆய்வறிக்கையில் இருந்து ஒரு அம்சத்தை கூட நிதியமைச்சர் எடுத்துக் கொள்ளவில்லை. நிதிநிலை அறிக்கையில் பொருளாதார ஆய்வறிக்கை குறித்து குறிப்பிடக்கூடவில்லை. கடந்த 6 மாதங்களாக ஏற்றுமதியும் 6 மாதங்களாக இறக்குமதியும் சரிந்து கொண்டு செல்கிறது.

ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகளுக்குப் பின்பும் முந்தைய ஆட்சியாளர்களை குறை கூறுவதா? பொருளாதார சரிவுக்கு முந்தைய ஆட்சியே காரணம் என்று எவ்வளவு காலத்திற்கு கூறிக் கொண்டு இருப்பீர்கள்?

பாஜக ஆட்சியில் பொருள்களுக்கான தேவையும் அதிகரிக்கவில்லை, தொழில் முதலீடும் உயரவில்லை. நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை மக்களிடம் தெரிவிக்க அரசு ஏன் தயங்குகிறது? நாட்டின் வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1%ஆக அதிகரித்துவிட்டது.

நாட்டில் பொருள்களின் தேவையை அதிகரிப்பதற்கான எந்த அம்சமும் பட்ஜெட்டில் இல்லை. மக்களின் கைகளில் பணம் கிடைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தால் தான் பொருள்களின் தேவை அதிகரிக்கும். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *